ஈராக்கின் மிகப்பெரிய எண்ணை சுத்திகரிப்பு ஆலையை தீவிரவாதிகள் கைப்பற்றினர்.
ஈராக்கில் முதலாவதாக 2–வது பெரிய நகரமான மொசூலை தீவிரவாதிகள் கைப்பற்றினர். அதைத்தொடர்ந்து பல நகரங்களுக்கு முன்னேறினர். ஈராக்கின் மிகப்பெரிய எண்ணை சுத்திகரிப்பு ஆலை பாய்ஜி நகரில் உள்ளது.
இது சலாகுதீன் மாகாணத்தில் அமைந்துள்ளது. இதை கைப்பற்ற தீவிரவாதிகள் முனைப்பு காட்டினர்.
இவர்களது படையின் ஒரு பிரிவினர் கடந்த 10 நாட்களாக இங்கு தாக்குதல் நடத்தினர்.
அவர்களை தடுக்க ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. தொடக்கத்தில் தீவிரவாதிகள் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டது.
அதை அரசு மறுத்தது. ராணுவம் அதை மீட்டு விட்டதாக கூறப்பட்டது. அதற்கு சாட்சியாக எண்ணை சுத்திகரிப்பு வாயில்களில் ராணுவ வீரர்கள் நிற்பது போன்று போட்டோக்களும் வெளியிடப்பட்டன.
இருந்தாலும் எண்ணை சுத்திகரிப்பு ஆலைக்குள் தீவிரவாதிகளின் கருப்பு நிற கொடி பறப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் எண்ணை சுத்திகரிப்பு ஆலை முழுவதும் தீவிரவாதிகள் கட்டுப் பாட்டில் வந்து விட்டது.
அதன் மூலம் எண்ணை சுத்திகரிப்பு ஆலையை கைப்பற்றி விட்டதாக தீவிரவாதிகள் அறிவித்துவிட்டனர். தற்போது அங்கு மலைவாழ் இனத்தை சேர்ந்த ஒருவர் நிர்வாகி ஆக பணி அமர்த்தப்பட்டுள்ளார்.
தற்போது சிரியா மற்றும் ஜோர்டான் எல்லையில் உள்ள அனைத்து நகரங்கள் மற்றும் ஹதிதா அருகேயுள்ள அணை மற்றும் அல்– தபார் விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் தீவிரவாதிகள் வசம் உள்ளன.
