இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் அணித் தலைவரின் அபாரமான 160 ஓட்டங்கள் மற்றும் தம்மிக்க பிரசாத்தின் துல்லியமான பந்து வீச்சு இலங்கைக்கு வரலாற்று சிறப்பு மிக்க தொடா் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றுள்ளது.
இதுவரை இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடர் வெற்றி ஒன்றினை பதிவு செய்யாத இலங்கை, இன்று அந்த சாதனையை பதிவு செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நேற்றைய நான்காம் நாளில் தனது இரண்டாவது இனிங்ஸை 214 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் தொடா்ந்த இலங்கை, அணி மஹேல மற்றும் மெத்யூசின் நிதானமான துடுப்பாட்டத்தின் உதவியுடன் ஸ்திரமான நிலையை அடைந்தது.
மஹேல ஜயவர்தன தனது 48ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினை பூா்த்தி செய்து 79 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதன்போது இலங்கை அணி 159 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது.
மெத்யூஸ் தனது சிறப்பான ஆட்டத்தை தொடா்ந்தும் வெளிப்படுத்தினார். எனினும் சந்திமால் மற்றும் பிரசாத் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில் 8ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சோ்ந்த ரங்கன ஹேரத் மற்றும் மெத்யூஸ் 149 ஓட்டங்களைப் பெற்றனர். இது இம்மைதானத்தில் பெறப்பட்ட இரண்டாவது சிறந்த இணைப்பாட்டமாகும். ஹேரத் 48 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
அணித்தலைவருக்கான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்யூஸ் 160 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
இறுதியில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 457 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இங்கிலாந்துக்கு 350 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலகு வெற்றியை பெறும் நோக்குடன் களமிறங்கிய இங்கிலாந்தால் தம்மிக்க பிரசாத்தின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாது போனது. 4ஆம் நாள் ஆட்ட நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 57 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது.
போட்டியின் இறுதி நாளான இன்று, கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ள நிலையில் வெற்றி பெறுவதற்கு இங்கிலாந்து 293 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் உள்ளது
