
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட பட்டதாரி பயிலுனர்களை வெளிமாவட்டங்களில் கடமையாற்றுமாறு விடுக்கப்பட்டுள்ள பணிப்பை இடைநிறுத்தி வைக்குமாறு பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன்
செனவிரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
முல்லைத்தீவு, பதுளை, யாழ்ப்பாணம் போன்ற வெளிமாவட்டங்களில் கடமையாற்றுமாறு மாவட்ட செயலாளரினூடாக பணிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, அமைச்சின் செயலாளர் அபெயகோன் ஆகியோரை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் கடந்த புதன்கிழமை (30) சந்தித்து கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மேலும் தெரிவிக்கையில்................
பட்டதாரி பயிலுனர்களாக அம்பாறை மாவட்டத்தில் கடமையாற்றியவர்களுக்கு தற்போது பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முல்லைத்தீவு, பதுளை, யாழ்ப்பாணம் போன்ற வெளிமாவட்டங்களில் அவர்களை கடமையாற்றுமாறு மாவட்ட செயலாளரினூடாக பணிக்கப்பட்டுள்ளது. அதனை இடைநிறுத்தி அவர்களை அம்பாறை மாவட்டத்திலுள்ள மத்திய அரசாங்க மற்றும் மாகாண சபை காரியாலயங்களில் நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன்.
இவ்வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அமைச்சர் ஜோன் செனவிரட்ன, மத்திய அரசாங்க காரியாலங்களில் ஏற்பட்டுள்ள வெற்றிடப்பிரச்சினை மற்றும் மாகாண சபைக் காரியாலயங்களிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவது சம்பந்தமாக மாகாண சபைகளுடனும் ஜனாதிபதியுடனும் பேசி தீர்வு காணவேண்டும் என்றார்.
ஜனாதிபதியுடன் பேசி தீர்வு எட்டும் வரை பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவர்கள் தற்போது கடமையாற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்ற அனுமதியளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தத்தோடு , வெளிமாவட்ட கடமைகளுக்கு உடன் செல்லுமாறு மாவட்ட செயலாளரினால் தொலைநகல் மூலம் பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் இதன்போது அமைச்சரிடம் சுற்றிக்காட்டினேன்.
இதனையெடுத்து அமைச்சர் ஜோன் செனவிரட்ன அம்பாறை மாவட்ட பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினை குறித்து ஜனாதிபதியுடன் பேசி தீர்வு காணும்வரை இவர்களுக்கான இடமாற்றத்தினை தற்காலிகமாக இரத்துச் செய்யுமாறு அமைச்சின் செயலாளர் அபெயகோனுக்கு உத்தரவிட்டுள்ளார்.
