Advertisement

Main Ad

ஊரின் பெயர் பொறிக்கப்பட்ட நவீன பெயர் பலகை சாய்ந்தமருது மற்றும் மருதமுனையில் நடப்படாதது ஏன்?- மக்கள் கேள்வி



வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நாட்டிலுள்ள நகரங்கள், கிராமங்கள் தோறும் ஊரின் எல்லையைக் காண்பிக்கும் நோக்கமாக ஊரின் பெயர் பொறிக்கப்பட்ட நவீன பெயர் பலகை அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேசத்தில் சாய்ந்தமருது மற்றும் மருதமுனை ஆகிய ஊர்களின் எல்லைப் பகுதிகளில் நடப்படாதது குறித்து இப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இப் பெயர் பலகை இவ்வூர்களில் நடக்கூடாது என யாராவது தடை விதித்துள்ளனரா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.
சாய்ந்தமருது கிராமத்தில் ஆரம்ப காலத்தில் நடப்பட்டிருந்த “சாய்ந்தமருது” என மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டிருந்த பெயர் பொறிக்கப்பட்ட கல்லும் கூட அகற்றப்பட்டிருப்பதும் இம்மக்களுக்கு வேதனை தரும் விடயமாக இருந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாவட்டத்தில் நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி, சம்மாந்துறை. கல்முனை, பாண்டிருப்பு என சகல ஊர்களுக்கும் பெயர் பொறிக்கப்பட்ட நவீன பெயர் பலகை நடப்பட்டிருந்தும் ஏன் சாய்ந்தமருதிலும் மருதமுனையிலும் எல்லைப்பகுதிகளில் இப் பெயர்ப் பலகைகள் நடப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பி இதற்கான நடவடிக்கையை சம்மந்தப்பட்டவர்கள் எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.