Advertisement

Main Ad

ஜேர்மன் நிதி உதவியுடன் சாய்ந்தமருது தோனா ஆற்றை நவீன முறையில் அபிவிருத்தி செய்ய ஏற்பாடு!


IMG_0124
சாய்ந்தமருது தோனா ஆற்றை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு ஜேர்மன் நாட்டின் நகரம் ஒன்றின் நிதி உதவியைப் பெறுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
சாய்ந்தமருது தோனா ஆற்றின் பாதுகாப்பு மற்றும் அதனை அபிவிருத்தி செய்தல் தொடர்பாக கல்முனை மாநகர சபையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற திணைக்களத் தலைவர்களுடனான உயர்மட்டக் கூட்டத்தில் தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த உயர்மட்டக் கூட்டத்தில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர், சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீத், மாநகர சபை உறுப்பிபினர்களான ஏ.ஏ.பஷீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், மாநகர முதல்வரின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.எம்.சத்தார், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜெசூர், சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சஹீலா இஸ்ஸதீன், கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.முஸ்தபா, ஆசிய மன்ற நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத், சாய்ந்தமருது பிரதேச செயலக கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர், சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா, சாய்ந்தமருது வர்த்தகர் சங்கத் தலைவர் ஏ.ஏ.சலீம் உட்பட மற்றும் பல அதிகாரிகளும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் மு.கா. குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் மேலும் பேசுகையில் கூறியதாவது;
” கடந்த பல வருடங்களாக சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கின்ற சாய்ந்தமருது தோனா ஆற்றை சுத்தம் செய்வதற்கு நாம் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளித்துள்ளன. எனது இந்த முயற்சிக்கு பக்க பலமாக இருந்து ஒத்துழைப்பு வழங்கிய மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் அவர்களுக்கும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜெசூர் அவர்களுக்கும் சாய்ந்தமருது மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் மூலம் கிடைக்கப் பெற்றுள்ள நிதியைக் கொண்டு இன்று நாம் இந்த தோனாவை சுத்தம் செய்வதற்கு ஆரம்பித்துள்ளோம். அது கூடிய விரைவில் நிறைவடையும் என்று நம்புகின்றோம். அதேவேளை மேலதிக நிதி தேவைப்படும் பட்சத்தில் அதனை மாநகர சபை மூலம் ஒதுக்கித் தருவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்.
இருந்த போதிலும் இவ்வாறு சுத்தம் செய்யப்படுகின்ற இத்தோனா மீண்டும் குப்பை கூலங்களாலும் சல்பீநியாக்களாலும் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதும் எதிர்காலத்தில் அதனை மக்களின் பொழுது போக்கிற்கான இடமாக நவீன முறையில் அபிவிருத்தி செய்து அழகுபடுத்துவதும் நமது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
என்னைப் பொருத்தவரை இத்தோனாவை சுத்தம் செய்வதுடன் நமது வேலை முடிந்து விட்டது என்று எண்ணவில்லை. மாறாக இதனை தொடர்ந்தும் பாதுகாத்து நவீன முறையில் அபிவிருத்தி செய்து மக்கள் பொழுது போக்கும் ஒரு முக்கிய இடமாக அழகுபடுத்துவதே எனது கனவாகும். அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாகவே இதனை நான் நோக்குகின்றேன்.
இத்திட்டத்திற்கு பாரிய நிதி தேவைப்படும். அதனை இந்த அரசாங்கத்தில் இருந்தோ அல்லது அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களில் இருந்தோ பெற்றுக் கொள்ள முடியாது. இதற்குள்ள ஒரே வழி யாதெனில், வெளிநாட்டிலுள்ள முன்னேறிய நகரம் ஒன்றின் நிதியுதவியை நாடுவதேயாகும். அதற்கான முயற்சிகளில் நான் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன்.
நமது கல்முனை மாநகர சபையை பல நகரங்களுடன் இணைத்து பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நானும் முதல்வரும் பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அதில் ஒரு அங்கமாக ஜேர்மன் நாட்டின் நியூ ரோம் பேர்க் நகருடன் கல்முனை மாநகர சபையை கூட்டிணைப்பு செய்து அதன் ஊடாக சாய்ந்தமருது தோனா ஆற்றை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டு- அதற்கான நகர்வுகள் இடம்பெறுகின்றன.
விரைவில் அங்கிருந்து ஓர் உயர்மட்டக் குழுவினர் இங்கு விஜயம் செய்து ஆய்வறிக்கைகளை தயாரிக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து நாங்கள் குறித்த நகருக்கு சென்று ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திடுவதன் மூலம் கோடிக்கணக்கான நிதியை இத்திட்டத்திற்காக பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை உங்களிடம் வெளிப்படுத்துகின்றேன். இதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கின்றேன்.
இந்நிலையில் இன்று சுத்தம் செய்யப்டுகின்ற தோனாவை மீண்டும் கழிவுப் பொருட்கள் கொட்டும் இடமாக மாற்றாமல் பாதுகாக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதற்கு மாநகர சபையை மாத்திரம் பொறுப்புச் சாட்டாமல், சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், கிராம சேவகர்கள், பள்ளிவாசல் மரைக்காயர்கள் என அனைத்து தரப்பினரும் கரிசனை செலுத்த முன்வர வேண்டும்.
இத்தோனாவை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இன்றில் இருந்து மேற்கொள்வதற்கு நாம் தயாராக வேண்டும். இதற்காக இங்கு முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை நாம் உடனடியாக அமுல்நடாத்த வேண்டும். இதற்காகவே நான் திணைக்களங்களின் தலைவர்கள் அனைவரையும் அவசரமாக அழைத்து இக்கூட்டத்தை நடாத்துகின்றேன்.
இது தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குகின்ற அதேவேளை தேவையான சந்தர்ப்பங்களில் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு பொலிசார் முன்வர வேண்டும்.
அதேவேளை தோனாவின் இரு மருங்கிலுள்ள வீதிகளிலும் மின் விளக்குகளைப் பொருத்தி அப்பகுதியை வெளிச்சமான சூழ்நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
அத்துடன் அப்பகுதியிலுள்ள அனைத்து வீதிகளிலும் ஒழுங்கைகளிலும் உள்ள வீடுகளில் இருந்து குப்பை மற்றும் கழிவுகளை மாநகர சபை கிரமமாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கென மேலதிகமாக தேவைப்படுகின்ற மூன்று சிறிய ரக மெஷின் பெட்டிகளை உடனடியாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோனாவின் எல்லையை பாதுகாப்பதுடன் கழிவு நீர் செலுத்தப்படாமல் தடுப்பதற்கு சகல திணைக்களங்களும் பள்ளிவாசல் நிர்வாகமும் கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கூறப்பட்ட விடயங்களை வெற்றிகரமாக அமுல்நடாத்துவதற்கு தோனா அபிவிருத்திக் குழு எனும் அமைப்பை ஸ்தாபிப்பதற்கு கிராம சேவகர்களின் அனுசரணையுடன் உடனடி ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
இது தவிர நன்கொடையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இத்தோனாவின் குறித்த ஒரு சிறு பகுதியை மாதிரிக்காக நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாநகர சபையை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.
அதேவேளை இப்படியொரு முக்கியத்துவமிக்க அவசரக் கூட்டத்தை தான் இல்லாத போதிலும் மாநகர சபையில் நடாத்துவதற்கு அனுமதியும் ஒத்துழைப்பும் வழங்கிய முதல்வர் நிசாம் காரியப்பர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று ஜெமீல் குறிப்பிட்டார்.
IMG_0108IMG_0112 IMG_0109 IMG_0118 IMG_0121 IMG_0114 IMG_0115 IMG_0116