உலக வரலாறு சாதனையாளர்களாக நமக்கு அடையாளம் காட்டியவர்களில் பலரது வாழ்க்கைப் பயணம் சோகங்களைக் கடந்து தான் வந்திருக்கின்றன. அண்மையில் இளம் வயதிலேயே மருத்துவக் கண்டுபிடிப்பொன்றை செய்த இளம் சாதனையாளர் ஒருவரை குருநாகலைப் பிரதேசத்தில் சந்தித்தோம்.
இவர் தனது 19 வயதிலேயே பல சோகங்களைக் கடந்து வந்த ஒரு சாதனையாளர். 12 வயதிலேயே தனது தாயை திடீர் விபத்தொன்றில் இழந்த எம்.டி.எம். ஸக்கி லத்திப், தந்தையின் சகோதரியுடன் குருநாகலை, இப்பாகமுவ தேதிலியங்க எனும் பிரதேசத்தில் வசித்து வருகின்றார்.
‘எனது உம்மா தனது மரணத் தருவாயில ‘மகன் நன்றாகப் படித்து சமூகத்தில் நல்ல நிலைமைக்கு வர வேண்டும். எல்லோருடனும் பணிவாக நடந்து, எல்லோரது மனதிலும் நீங்கா இடம் பிடிக்க வேண்டும், நீ சமூகத்துக்கும் அடுத்தவங்களுக்கும் பயனுள்ளவனாக , தேவையுடையவனாக இருக்க வேண்டும்’ என்று சொன்ன வார்த்தைகள் தான் என் முயற்சிகளுக்கும் என் வெற்றிக்கும் காரணம்.’
எனது உம்மா சொன்னது போல நான் அனைவருடனும் பணிவாக நடந்து அனைவரினதும் அன்பை வென்று அவர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறேன்.
இறைவனின் அருளால் சரும நோய்களை குணப்படுத்தக் கூடிய மருத்துவப் பசை ஒன்றை கண்டு பிடித்து, கொடிய சரும நோய்களினால் பதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தக் கூடிய மருந்தொன்றைக் கண்டுபிடித்திருக்கிறேன். உம்மா சொன்னது போல சமூகத்துக்கும் மனிதர்களுக்கும் நான் தேவையுடையவனாகவும் பயனுள்ளவனாகவும் மாறி எனது வாழ்க்கையில் முதற்கட்டமாக ஒரு சாதனையை செய்திருக்கிறேன். எனது உம்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றியிருக்கிறேன். என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று ஸக்கி லத்திப் கூறிய வார்த்தைகள் ஒரு நிமிடம் நெகிழ வைக்கின்றன.
மடிகே முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சாதாரண தரம் வரை கல்வி பயின்ற ஸக்கி லத்திப் சிறு வயது முதல் வைத்தியராக வர வேண்டுமென்ற கனவுகளோடு தனது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்தவர்.
ஆனால், சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக உயர் தரம் வணிகப் பிரிவில் கற்பதற்காக பரகஹதேனியவிலுள்ள பாடசாலையொன்றில் 2011 ஆம் ஆண்டு இணைந்து கொண்டார் ஸக்கி லத்திப்.
மருத்துவத்துறையிலிருந்த ஆர்வத்தால் தனது மருத்துவக்கனவை கைவிடாமல், சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வர முன்பே விடுமுறை காலத்தில் உயர் தர செயற்றிட்டத்திற்காக சரும நோய்கள் மனிதர்களை உடல் ,உள இரீதியாகப் பாதித்து இருந்தமையும், அதற்கு ஆங்கில மருத்துவ முறைமையினால் பூரணமாக குணம் கிடைக்காமையும் சில ஆங்கில மருத்துவத்தால் நோயாளிகளுக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுகின்ற விடயத்தையும் தனது தேடலின் மூலம் அறிந்து கொண்ட ஸக்கி லத்திப், இப்பிரச்சினைக்கு சுதேச மருத்துவ முறையின் கீழ் எவ்வித பக்க விளைவுகளுமில்லாத குறுகிய காலத்தினுள் பூரணமாககள் குணப்படுத்தக் கூடிய தீர்வொன்றை முன் வைக்க வேண்டுமென்று இயற்கை மூலிகை மூலகங்களைக் கொண்டு சரும நோய்களுக்கான மருந்து தயாரிக்கும் ஆய்வில் ஈடுபடத் தொடங்கினார்.
அதன் விளைவாக சக்கி ஸ்கின் பேஸ்ட் (Zacki Skin Paste ) என்ற ஒரு மருந்தை 2011 ஆம் ஆண்டு கண்டு பிடித்தார். இந்த புதிய கண்டு பிடிப்பு நகச்சுற்றி , விரல்களுக்கிடையில் ஏற்படும் தோற்று, வெடிப்பு, தழும்பு, புதிய மற்றும் நாள் பட்ட சொறி சிரங்கு, கழுத்து இடுப்பு அக்குல் போன்ற இடங்களில் ஏற்படும் கருப்பு சாம்பல் நிற மாற்றம், முகப் பருக்கள் , செவ்வாப்பு , கட்டிகள், அரிப்பு , பூச்சிக் கடிகள், உள்ளங்கால் வெடிப்பு, வாத மற்றும் அடி காயங்களில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம், தேமல், அம்மைத் தளும்பு ஆகிய சர்ம நோய்களை இம்மருத்துவ பசையினால் எவ்வித பக்க விளைவுகளுமின்றி மிகக் குறைந்த காலத்தினுள் பூரணமாகக் குணப்படுத்த முடியுமென ஸக்கி லத்திப் கூறுகிறார்.
இவரால் கண்டு பிடிக்கப்பட்ட மருந்து பதிவு செய்யப்பட்டு காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு விஞ்ஞான பூர்வமான மருத்துவ ஆராய்ச்சியில் வெற்றி பெற்றதாக கொழும்பு பல்கலைக்கழக உள் நாட்டு மருத்துவக் கல்வி நிறுவகத்தாலும், சஹசக் நிமவும் தேசிய புத்தாகுனர் கண்காட்சி – 2013 இலும் இத்தயாரிப்புக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
க.பொ.த உயர் தர வணிகத்துறையில் கற்பதற்காக சென்ற ஸக்கி லத்திப், தனது கற்றல் மற்றும் வெளிக்களச் செயற்பாடுகளிலும் அந்தப்படசாலையிலும் சிறப்பாக வெளிக்காட்டினார். அப்பாடசாலையில் தனது திறமைகளை வெளிக்காட்டியதன் விளைவாக சில மாணவர்களின் குரோதத்துக்கு ஸக்கி லத்திப் முகம் கொடுக்க வேண்டியேற்பட்டதாம்.
ஆனால், வாழ்க்கையில் இளம் வயதில் பல சோகங்களையும் இன்னல்களையும் கடந்து இன்று ஒரு இளம் வயது சாதனையாளராக நம்முன் நிற்கின்றார்.
தனது இந்த வெற்றிக்குத் துணை நின்ற குடும்பத்தினரையும் இன்னும் பலரையும் ஸக்கி லத்திப் நினைவுபடுத்த மறக்கவில்லை. சிறு வயது முதல் வாழ்கையில் தான் பல துயரங்களுக்கு முகம் கொடுத்த போதிலும், தனது விடா முயற்சியையும் ஆசையையும் கனவையும் கை விடவில்லை. அவரது கனவு இன்று நிஜமாகி ஒரு மருந்தைக்கண்டு பிடித்துள்ளார்.
வட மேல் மாகாண ஆளுநர் சகி லதீப்பைச் சந்தித்துப் பாராட்டி, புதிய கண்டுபிடிப்பு தொடர்பாக கலந்துரையாடியதும் குறுப்பிடத்தக்கது.
அவரது கண்டுபிடிப்பை சந்தைப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றார். அவரது கண்டுபிடிப்பை விஸ்தீரப்படுத்தி அவருக்கான மருத்துவ கூட வசதிகள் இருந்தால் இது வரை காலம் பூரணமாகக் குணப்படுத்த முடியாமல் இருக்கும் Psoriasis எனும் சரும நோயினை பூரணமாகக் குணப்படுத்தக் கூடிய மருந்து மற்றும் மருத்துவ முறையினை தன்னால் கண்டறிந்து அறிமுகப் படுத்த முடியுமென ஸக்கி லத்திப் கூறுகின்றார்.
அவருக்கு இவ்விடயத்தில் உதவ முன் வருவார்களாக இருந்தால் ஸக்கி லத்தீபின் தொடர்பிக்கமான 0755242168, 0755242168 இலக்கம் மூலம் அவரைத் தொடர்பு கொள்ளலாம் .
வாழ்க்கையில் எத்தனை சோகங்கள் துன்பங்கள் வந்தாலும், அவற்றைக்கண்டு தளர்ந்து விடாதீர்கள் உங்கள் இலக்குகளையும் கனவுகளையும் அடையப்போராடுங்கள். உங்களை நோக்கி உங்கள் எதிரிகள் எறியும் கற்களைக் கொண்டு நீங்கள் உங்களுக்கான மாளிகைகளைக்கட்டிக் கொள்ளுங்கள் என்ற தத்துவங்களை உண்மையாக்கிக்காட்டிய ஸக்கி லத்திபின் எதிர்கால முயற்சிகளும் வெற்றியடையும் என நம்புவோம்.
