Advertisement

Main Ad

ரூ.200 கோடி செலவில் தயாராகவுள்ள ‘லிங்கா’ திரைப்படம்!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் “லி்ங்கா” படம் ரூ.200 கோடி செலவில் தயாரிக்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இன்று துவங்கியது.
Rajini-and-KS-Ravikumarரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்துள்ள ‘கோச்சடையான்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் ‘லிங்கா’ என்ற புதிய படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அந்த படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாராக இருக்கிறது. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி, அனுஷ்கா ஆகியோர் நடிக்கிறார்கள். பிரபல கன்னட பட அதிபர் ராக்லைன் வெங்கடேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்த படத்துக்கான சிறப்பு பூஜை மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், கர்நாடக வீட்டு வசதி மந்திரியும், பிரபல நடிகருமான அம்பரீஷ், அவருடைய மனைவி சுமலதா, படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முதன் முதலாக சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யும் காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சிக்கு மந்திரி அம்பரீஷ் ‘கிளாப்’ அடித்து படப்பிடிப்பை தொடங்கிவைத்தார். அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கிய பூஜை 6 மணிவரை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து லிங்கா படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று மண்டியா மாவட்டத்தில் தொடங்குகிறது. ஸ்ரீரங்கபட்டணம், மேல்கோட்டை, கரிகட்டா உள்ளிட்ட இடங்களிலும், மைசூர் அரண்மனையிலும் 9 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
ரஜினிகாந்த் நடித்த படையப்பா படம், 8 ஆண்டுகளுக்கு முன் மண்டியா மாவட்டத்தில் படமாக்கப்பட்டது. மேலும் அவரது பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு மைசூர் மற்றும் மண்டியா மாவட்டங்களில் நடைபெறுவது வழக்கம். அதேபோல லிங்கா படத்தின் காட்சிகளும் மண்டியா-மைசூர் மாவட்டங்களில் நடக்கிறது.
படப்பிடிப்பின்போது ரஜினியை பார்க்க அவரது ரசிகர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் லிங்கா படத்தின் படப்பிடிப்புக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. படப்பிடிப்பு நடைபெறும் 9 நாட்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட 6 சப்-இன்ஸ்பெக்டர்கள், 10 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 60 போலீஸ்காரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
படப்பிடிப்பு நடத்த மைசூர் மற்றும் மண்டியா மாவட்ட நிர்வாகத்திடமும் முறைப்படி அனுமதி பெறப்பட்டு உள்ளது. ரூ.200 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட இருக்கும் இந்த படத்தின் சில காட்சிகளை வெளிநாடுகளிலும் படமாக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. படத்தின் முழு படப்பிடிப்பையும் 50 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.